கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Saturday, December 24, 2016

கண்ணீரை வர வைத்த கவிதை

ஒரு விவசாயியின் கண்ணீர்•

நெத்தில கைவச்சு நெடுக பாத்தா படுத்து கிடக்குறதெல்லாம் என்னோட பயிர் தான்...

தண்ணி இல்லாம தலை சாஞ்சு போச்சு அதை பாத்த எனக்கு உசுரு கொல சாஞ்சு போச்சு....

வாங்குன கடனுக்கு தூங்குற இடமும் போச்சு கூலி குடுத்த காசுக்கு தாலி கூட போச்சு...

கவுர்மென்ட் ஆபிசரெல்லாம் கார் எடுத்து வராங்க கடன கட்டுனு கண்டபடி ஏசுராங்க...

பலகோடி அடிச்சவன் பந்தாவா திரியிறான் நடவுக்கு கடன் வாங்குன நானோ நடுத்தெருவுல நிக்கிறேன்...

ஊரை ஏய்க்கிறவனெல்லாம் உச்சத்தில வாழுறான் சோறு போட பிறந்த நானோ சேத்துக்குள்ள கிடக்குறேன்...

அடியாளா இருப்பவனெல்லாம் ஆடி கார்ல் போறான் விவசாயம் பன்னுற நானோ வீதியில நிக்கிறேன்....

என்னய்யா பாவம் செஞ்சேன்? மூத்த மக இப்ப தான் முழுகாம வந்திருக்கா, ஆஸ்பத்திரிக்கி போக கூட அப்பன் எனக்கு வக்கு இல்ல....

இளைய மக இப்பதான் எட்டாவது படிக்கிறா, பரிச்சைக்கு அனுப்பக் கூட பத்து ரூவா காசில்ல....

பாத்து வளத்த பசுமாடு கூட, வயித்துல பசியோட வலியில்லாம நிக்குது....

குறுவை நடவுக்கு ஒரு கொள்ளையை வித்துட்டேன்....

உரம் வாங்கிப் போட இருந்த ஒத்தை மாட்டையும் வித்துட்டேன்....

இனிமே ஒன்னுமில்ல என்கிட்ட அடகு வைக்க, இடிஞ்சு போச்சுய்யா என்வீட்டு செவருகூட...

அய்யா அரசாங்க சாமிகளே! ஆண்டுக்கு ஒருமுறையாவது அணைக்கட்ட திறந்திடுங்க...

ஏய்,பட்டனத்து மனுசங்களே, உங்க வயித்துக்கு சோறு தந்த எங்க வயித்தெறிச்சல கேளுங்க...

அடுத்த தலைமுறைக்கு அஞ்சாறு பிளாட் வாங்குனீங்களே, சோறு திங்க நிலம் வேணும்னு கொஞ்சூண்டு நினைச்சிங்களா?

பத்திரிகை காரங்களே சென்னையில் வெள்ளம்னு முன்னால எழுதுனிங்களே...

விவசாயி வேதனை மட்டும் விளையாட்டா போச்சா? கரைவேட்டி காரங்களே தேர்தல் நேரத்தில தேடிவந்து நின்னிங்களே ஓயாம அழுகுற எங்க ஒப்பாரி கேட்கலயா?

மரங்கள வெட்டாதிங்க! மண்ணை அள்ளாதிங்க! மழை வந்து எட்டி பாக்கும் அதை மல்லுக்கட்டி விரட்டாதிங்க! நீங்க திங்கிற அரிசியெல்லாம் தண்ணீருல விளையல, அது எங்க கண்ணீருல விளையுது!

நீங்க பட்டன தட்டுனா ஏசி ஓடும், உங்க பசி ஓடுமா? உதட்டுச் சாயத்தை விலை கொடுத்து வாங்குவிங்க, விவசாயத்தை வாங்க முடியுமா? சோறு போடுற எங்களை கூறு போட பாக்காதிங்க, வாழ வச்ச எங்களை அழ வச்சு பாக்காதிங்க! ஏறு புடிச்ச நாங்க வேறு எங்க போவோம்..?

உழைச்சு பொழச்ச நாங்க களச்சு போக மாட்டோம்! ஆண்டவன் அனுப்பி வச்ச அடுத்த கடவுள் நாங்க, வயிறு பசி போக்க வந்த வள்ளலார் நாங்க! எங்க கண்ணீரையெல்லாம் கண்டுக்காம விட்ராதிங்க, எங்க அழுகையெல்லாம அலட்சியம் செய்யாதிங்க....

காலம் ஒருநாள் எங்களை கடவுளாக் காட்டும்...! சரித்திரம் ஒருநாள் எங்களை சாதனையா பேசும்...! 

படித்ததில் பிடித்தது

இப்படிக்கு ஓர் விவசாயி.

No comments:

Post a Comment